Skip to content
Home » தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

தூக்கி வீசவும் தெரியும்…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வௌியிட்டுள்ளார்… அவற்றில் கூறியதாவது… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான் தமிழ்நாட்டின் நடுப் பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு தீரர் கோட்டமாம் திருச்சியில் நேற்று (ஜூலை 26) நடந்த டெல்டா மண்டலத்து வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A)வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.

பயிற்சிக் கூட்டப் பந்தலில் மட்டுமா கூட்டம், திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயிற்சிக் கூட்டம் நடைபெற்ற ராம்ஜி நகர் வரை கழகத் தொண்டர்களும் பொதுமக்களும், காவிரியில் புதுவெள்ளம் பாய்ந்தது போன்ற உற்சாகத்துடன் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் வாழ்த்தொலியில் உள்ளம் மகிழ்ந்தேன். பொன்னாடையும், புத்தகமும் வழங்கி அன்பை வெளிப்படுத்திய மக்களுக்கு நடுவே, கோரிக்கை மனுக்களுடன் இருந்தவர்களும் உண்டு. அவற்றை அக்கறையுடன் பெற்றுக் கொண்டேன்.

திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரைப் பயண வழியில்கூட, வாகனத்தை மறித்து சந்தித்து கோரிக்கை மனுவைத் தர முடியும் என்றும், உரிய வகையில் அது நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையை செல்லும் இடங்களில் எல்லாம் காண்கிறேன். திருச்சியிலும் அதனைக் கண்டேன். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் மக்களுக்காக உழைக்கின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை வழங்குகின்ற ஆட்சியாக, ஒவ்வொரு நாளும் அந்தத் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்கின்றனவா என்று கண்காணித்துச் செயல்படுத்தக் கூடிய ஆட்சியாக திராவிட மாடல் அரசின் ஆட்சி நிர்வாகம் கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் செயலாற்றி வருகிறது.

ஆட்சியின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் வழிநெடுக நின்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மனுக்களை அளித்தார்கள். இவையெல்லாம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பொதுமக்களே நமக்குத் தெரிவிப்பது போல இருந்தது.

கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவர்களின் மாதச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது.

பட்டா, சிட்டா, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்காக நீண்ட காலமாக அல்லாடிக் கொண்டிருந்தவர்கள் இரண்டாண்டுகளில் ஒரே ஒரு மனுவை “முதல்வரின் முகவரி”க்கு அனுப்பிவிட்டு சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்கள்.

தங்கள் கோரிக்கை விரைந்து நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பவர்களும் உண்டு. பயன் அடைந்தவர்களிடம் கழக அரசின் திட்டங்களின் நன்மையை எடுத்துச் சொல்வதும், கோரிக்கை மனு வழங்கியவர்களுக்கு உரிய முறையில் அதனை நிறைவேற்றித் தருவதும் கழகத்தின் சார்பிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கும் உள்ள கடமையாகும். அதனை நினைவூட்டி, களப்பணியாற்றிட அவர்களை ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக தீரர் கோட்டமாம் திருச்சி அமைந்திருந்தது.

கழகத்தின் முதன்மைச் செயலாளர் – உறுதிமிக்க உழைப்பாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் முன்னெடுப்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராசன், வைரமணி ஆகியோரும், காவிரி டெல்டா மாவட்ட – ஒன்றிய – நகர – மாநகர – பேரூர் – கிளைக் கழக நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பயிற்சிக் கூட்டத்தை நேர்த்தியாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டி, திருச்சியில் கழகம் எதைத் தொடங்கினாலும் வெற்றிதான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

முதன்மைச் செயலாளர் நேரு அவர்களுக்கும் அவருக்குத் துணை நின்றவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15 கழக மாவட்டங்களைச் சேர்ந்த, ஏறத்தாழ 12ஆயிரத்து 645 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற பயிற்சிக் கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் கழக அரசின் சாதனைகள் மக்களிடம் எந்தளவுக்குச் சென்று சேர்ந்து, நன்மை விளைவித்திருக்கிறது என்பதை எடுத்துக்கூறினார்.

கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி. அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டையும், அது இந்தியாவுக்கே முன்னோடியாக இருப்பதையும் எடுத்துரைத்தார்.

மாண்புமிகு அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களையும் அதன் பயன்களையும் விரிவாகவும் விரைவாகவும் எடுத்துக் கூறினார்கள்.

கழக சட்டத்துறைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள், வாக்குச்சாவடி முகவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களும் எப்படிச் செயல்பட வேண்டும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை பவர் பாயிண்ட் வாயிலாகத் திறம்பட விளக்கினார்.

கழக மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி அவர்கள் வாக்குச் சாவடி முகவர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக கழகப் பணிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட்டு, ஒவ்வொரு வாக்காளரையும் அணுக வேண்டிய முறைகளை விளக்கினார்.

கழகத் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்த கையேடு மின்னிதழாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் ‘வாட்ஸ்அப்’ வாயிலாகப் பகிரப்பட்டது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தால் தேர்தல் நேரத்தில் நேரடிக் களத்தில் செலுத்த வேண்டிய அக்கறையைப் போல, சமூக வலைத்தளத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நம் அரசியல் எதிரிகள் பொய்களை மட்டுமே பரப்பக் கூடியவர்கள். அவர்களின் அவதூறுகளும் வதந்திகளும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.

பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும்.

திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.

மாநாட்டிற்கு இணையாகத் திருச்சியில் நடந்த பயிற்சிக் கூட்டத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்ட போது, கழகத் தீர்மானக் குழுத் தலைவர் கவிஞர் தமிழ்தாசன் அவர்கள் ஒரு குறிப்பினைத் தாளில் எழுதித் தந்தார். வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் கவிஞர் தமிழ்தாசன், அவ்வப்போது என்னிடம் கழகம் குறித்த தகவல்களைத் தருவது வழக்கம். காரில் வரும்போது அவர் தந்த தாளினைப் படிக்கத் தொடங்கினேன்.

“வணக்கம் அண்ணா.. நாளைய நாள் தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் (27-7-1969).

என் வாழ்நாளில் நான் கண்டுபிடித்த – கடைப்பிடித்த ஒரே தலைவர் அவர்தான்.

அறிவூட்டிய தந்தையாக, அரவணைத்துப் பாராட்டிய தாயாக, என் உயிரில் இன்று வரை, ஏன் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே.

12 வயது சிறுவனான என்னை, ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து அழைத்து வந்த என் தந்தை, அண்ணா சாலையில் இருந்த முரசொலி அலுவலகத்தில் ஓர் இரவு நேரத்தில் அறிமுகப்படுத்திய அந்த நாளிலிருந்து என் இதயச் சிம்மாசனம் அந்த மாமனிதரைச் சுமந்து, சுமந்து சுகம் கண்டு கொண்டிருக்கிறது.

மிகமிகச் சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பால் உயர்ந்து, உன்னதமான தன்னலமற்ற தொண்டால், பெரியார் – அண்ணா ஆகிய பெருமக்களை அடைந்து, தமது பல்வேறு பன்முகத்தன்மைத் திறமையால் இத்தமிழ் உலகத்தில் மட்டுமில்லாது, மனித குலத்திற்காகத் தம்மை ஆழமாக அர்ப்பணித்துக் கொண்ட திராவிட இயக்க ஆணிவேர்களில் ஒருவரான அவர் மாபெரும் தலைவரானார்.

அவர் பெரியாரைப் போல வசதிக்காரர் அல்லர், அண்ணாவைப் போல் கல்லூரிப் படிக்கட்டுகள் ஏறியவரும் அல்லர், மேற்கண்ட அவர்களால் அடையாளம் காணப்பட்ட அரிய மனிதர். காரணம், அவரின் உழைப்பு, உறுதி, திறமை, தியாகம், தகுதி, தன்னறிவு என்பனவற்றால் உயர்ந்தவர். அவரால் இலட்சக்கணக்கான தொண்டர்கள் உருவாக்கப்பட்டு, பகுத்தறிவுப் பாசறை கூர் வாள் – வேல்களாக இருக்கிறார்கள். அதனால், அண்ணா அறிவாலயம் ஆலமரம் போல் தழைத்து, கிளைத்து நிற்கிறது.

வேருக்கு விழுதாக – தலைமைக்கு வலுவாக பல்லாயிரக்கணக்கான கழகக் கிளைகளை உருவாக்கியவரும் அவரே. இந்திய அரசியலில் எந்நேரமும் இயங்கிய ஓர் எந்திர மனிதர்.

இலக்கிய உலகத்தில் ஈடு, இணையில்லாத வகையில் தமிழ் மொழியையும், இனத்தையும் தலை நிமிர்த்திக் காட்டிய தண்டமிழ் ஆசான். அந்த மாபெரும் தலைவரைத் தலை தாழ்ந்து வணங்குகிறேன். வாழ்க தலைவர் கலைஞர் – வளர்க அவர் புகழ்”

– என்று தன் உள்ளத்து உணர்வுகளை காகிதத்தில் காவியமாக்கி இருந்தார் கவிஞர் தமிழ்தாசன்.

கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் உள்ளத்து உணர்வும் கவிஞரின் வரிகளில் வெளிப்பட்டிருந்தது.

உடன்பிறப்புகளாம் உங்களில் ஒருவன்தானே நானும்! என் உள்ளத்திலும் எத்தனையோ உணர்வலைகள்!!

பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய போது, கழகத்தில் தலைவர் பொறுப்பு கிடையாது. அண்ணா அவர்கள் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றார். “தான் கண்ட – கொண்ட ஒரே தலைவர் பெரியார்” என்பதால், தலைவர் நாற்காலியைப் பெரியாருக்காகவே விட்டு வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அன்புமிகு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் தோளில் ஏறியபோது, தந்தை பெரியார் அவர்களே, முன்னேற்றக் கழகத்திற்குத் தலைமைப் பொறுப்பு வேண்டும் என்பதையும் அதைக் கலைஞர் ஏற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் என்பது வரலாறு. பெரும்பாலான கழகத் தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்பதால், கழகத்தின் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவின் பேராதரவுடன் கழகத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். நாவலர் அவர்கள் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றார். அந்த நாள்தான், இன்றைய நாள்.

1969-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரிக்கும் வரை கழகத்தின் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். அரை நூற்றாண்டு காலம் கழகத்தைத் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து, நெருக்கடி நெருப்பாறுகளைக் கடந்து, உயிரனைய உடன்பிறப்புகளைக் காத்து, இயக்கத்தை வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தன் ஆட்சிக்காலத்தில் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியமைத்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் பணியில் மூத்த தலைவராக இருந்து வழிகாட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தினார். அவர் அளித்த பயிற்சிகளைப் பெற்று, உங்களில் ஒருவனான நான் கழகத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி வழங்க வேண்டிய பொறுப்பை கழகத்தினரும் பொதுமக்களும் என்னிடம் அளித்திருக்கிறார்கள்.

ஒன்றியத்தை ஆளுகின்ற ஜனநாயக விரோத – மதவாத பா.ஜ.க. ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது என்பதை திருச்சியில் நடந்த கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

கழக அரசு செய்து வரும் சாதனைகள் தொடர வேண்டுமானால், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும்.

இந்தியாவைக் காத்திட இந்தியா (I.N.D.I.A) உருவாகியிருக்கிறது. இது உண்மையான – ஒன்றுபட்ட இந்தியா. நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காணப் போகிற இந்தியா. இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில்கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, தலைவர் கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது.

கழகப் படை வீரர்களாக உடன்பிறப்புகள் அணிவகுத்திருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, தென் மாவட்டங்களுக்கான பயிற்சிக் களம், இராமநாதபுரத்தில் அமையவிருக்கிறது. உடன்பிறப்புகளே உங்களோடு நான் இருக்கிறேன். என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள். வெற்றி நம்முடன் இருக்கும்.. என்றும் நிலைத்திருக்கும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *