சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என தீர்ப்பு அளித்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அமலாக்கத்துறையினர் எப்படி கைது செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒருவரிடம் விசாரணை செய்து அதன் மூலம் வாக்குமூலத்தை பெற்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாகக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா? காவல்துறையினர்தான் கைது செய்ய முடியும் என கபில் சிபல் வாதிட்டார். இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்கும்படி அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வாதங்களை நாளைக்குள் நிறைவு செய்யும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.