Skip to content
Home » ஏற்றுமதிக்கு இந்தியா தடை……அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அரிசிதட்டுப்பாடு

ஏற்றுமதிக்கு இந்தியா தடை……அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அரிசிதட்டுப்பாடு

இந்தியாவில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ஆசிய, ஆப்பிரிக்க மக்களின் பிரதான உணவு பொருளாக அரிசி உள்ளது. அதிலும் இந்தியர்களுக்கு, அவர்கள் உள்நாட்டில் வசித்தாலும், வெளிநாட்டில் வசித்தாலும், அரிசி சோறு உண்டால்தான் ‘சாப்பிட்டது’ போலவே இருக்கும்.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாட்டால் அரிசி விலை உயரக்கூடும் என்ற கவலை வெளிநாடுவாழ் இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே, கனடா முதல் அமெரிக்கா வரை, மலேசியா முதல் ஆஸ்திரேலியா வரை அவசர அவசரமாக இந்தியர்கள் கடைகளில் அரிசி வாங்கி சேர்த்து வருகின்றனர். கடைகளுக்கு அரிசி பைகள் வந்திறங்கியதுமே விறுவிறு விற்பனையால் மாயமாய் மறைந்துவிடுகின்றன.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல கடைகளில், வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பலர் தாங்கள் வழக்கமாக வாங்குவதை விட இரு மடங்கு அதிகமாக அரிசி வாங்குகின்றனர். அதனால்தான் அரிசி விற்பனைக்கு கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு 5 கிலோ அரிசி பை மட்டுமே விற்கிறோம். சிலர், ஒரு அரிசி பைக்கு மேல் கேட்டு சண்டை போடுகிறார்கள். அதற்காக நாங்கள் அசைந்துகொடுப்பதில்லை’ என்று ஆஸ்திரேலியா சர்ரே ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்திய மளிகை அங்காடி ஒன்றின் மேலாளரான சிஷிர் சைமா கூறினார்.

இந்த ‘கிராக்கி’யை பயன்படுத்தி சில கடைகள் சத்தமில்லாமல் விலையை உயர்த்தி இருப்பதும் நடந்திருக்கிறது. தற்போது உலகெங்கும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கிவருகின்றன. இந்தியர்களின் ‘அரிசி வேட்டை’யால் அதிகரிக்கும் இதன் பற்றாக்குறை, இந்திய உணவக உரிமையாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. மலேசிய நாட்டின் இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி ஜெயபாலன், ‘அரிசி தட்டுப்பாட்டால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். விலை அதிகம் கொடுத்து அரிசி வாங்க வேண்டியிருந்தால், தோசை, இடியாப்பம் போன்றவற்றின் விலை உயரும். எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர் என்ற நிலையில் நாங்கள் தற்போது விலையை உயர்த்தவில்லை. ஆனால் அரிசி தட்டுப்பாடு தொடர்ந்தால் எங்களுக்கு பிரச்சினை ஏற்படும்’ என்று கூறுகிறார். மோசமான காலநிலை, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உலக உணவுச் சந்தைகள் தடுமாற்றத்தில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு, சர்வதேச அளவில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!