டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கிலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கிலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை.
நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்தது. இந்த திமிங்கில குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை பகுதியில் காணப்பட்டது. மாலையில் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. உடனே மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை, திமிங்கிலங்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது.
இது குறித்து பல்லுயிர் பாதுகாப்புத்துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி கூறுகையில், “இதுவரை 51 திமிங்கிலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கிலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்ல வைப்பது தான் எங்களது நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கிலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்” என அவர் கூறினார்.
திமிங்கலங்களுக்கு உதவும் குழுவில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கிலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர். நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.