1999ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து வெற்றிக்கொடி நாட்டிய தினம் ஜூலை 26. இந்த தினத்தை இந்தியா கார்கில் போர் வெற்றி தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. இந்த போரில் திருச்சி மாநகரை சேர்ந்த மேஜர் சரவணன் என்பவரும் வீரமரணம் அடைந்தார். அவருக்கு திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நினைவு தூண் எழுப்பப்பட்டு அந்த சாலைக்கு மேஜர் சரவணன் சாலை
என பெயரிடப்பட்டுள்ளது. இன்று கார்கில் வெற்றிதினம் என்பதால், திருச்சி வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து நேராக கண்டோன்மெண்டில் உள்ள மேஜர் சரவணன் நினைவு தூணுக்கு சென்று மலர்வளையும் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு மற்றும் கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.