டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 15ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் உள்ள 15 திமுக மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் காலை 8 மணிக்கே திடலுக்கு வரத் தொடங்கினர்.
அவர்கள் வந்த வாகனங்களை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்திவிட்டு, பந்தலுக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் கையேடு ,பேனா உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. அவற்றை வாங்கிக்கொண்டு பொறுப்பாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர். பின்னர் மாவட்ட வாரியாக அவர்கள் பந்தலில் அமர்ந்தனர்.
காலை 10 மணி வரை இந்த பணிகள் நடந்தது. 11 மணி அளவில் பாசறைக்கூட்டம் தொடங்கியது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து திமுக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசினார். செயலி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் குறித்து திமுக அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி. பேசினார். அதைத்தொடர்ந்து திமுக அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்தும், அதனை மக்களிடம் எடுத்துச்சென்று விளக்குவது குறித்தும் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, மகேஷ் ஆகியோர் பேசினர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணிக்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, சமூகவலைத்தள பயன்பாடும், அதனை செயல்படுத்த வேண்டிய முறைகள் பற்றியும் பேசுகிறார். மாலை 3.45 மணிக்கு ஆ. ராசா எம்,பி, திமுக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து பேசுகிறார்.
மாலை 4 .15 மணிக்கு அமைச்சர் கே.என். நேரு வரவேற்று பேசுகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையுரையாற்றுகிறார். 4.45 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயிற்சி பாசறையின் நிறைவாக சிறப்புரையாற்றுகிறார். வரும் மக்களவை தேர்தலில் 40க்கு 40 இடங்களையும் வென்றெடுக்க இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தொண்டர்களிடம் முதல்வர் பேசுகிறார்.பின்னர் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.