கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் எதிரொலியாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கிரீஸ் நாட்டில் உள்ள எலியா தீவில் காட்டுத்தீ மளமளவென பரவியது.இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக அந்நாட்டு விமான படையை சேர்ந்த நீர் தெளிக்கும் விமானம் ஒன்று சென்றது. கனடைர் சி.எல்.-215 என்ற எண் கொண்ட அந்த விமானம் பிளாடனிஸ்டோஸ் என்ற பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, அந்த விமானம் திடீரென வெடித்து சிதறியது. இதில் விமானத்தின் கேப்டன் (வயது 34), துணை விமானி (வயது 27) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். ஆயுத படையை சேர்ந்தவர்கள் பணியின்போது உயிரிழந்த நிலையில், 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.