Skip to content
Home » திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நாளை மறுநாள் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண்மை கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் 27.07.2023 அன்று

வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் 3 நாட்கள் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண்மை கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கவுள்ளார்.

கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண் சங்கமம் -2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250 உள்ளரங்குகளும் 50 வெளி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. இக்கண்காட்சியில் 17 மாநில அரசு துறைகளும் ஒன்றிய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும், 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை இரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமைகுடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல்விளக்கங்கள் மற்றும் வேளாண் துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இக்கண்காட்சிக்கு வருகை தரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள், மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் இக்கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப் பதிவுகள், மண்வள அட்டை வழங்குதல் (மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி எடுத்து வரும் விவசாயிகளுக்கு) ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேற்காணும் இடுபொருட்கள் இடுபொருட்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையின் நகலினை உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கண்காட்சியை காண விரும்பும் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். எனவே அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சி முகாமினை பார்வையிட்டு பயன்பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *