இந்தோ-நேப்பாலில் நடைபெற்ற சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம் வென்ற ஜெயங்கொண்டம் வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதே தமது இலக்கு எனவும், கூடுதல் உதவித்தொகை கிடைத்தால் ஆசிய போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என அவர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்-உமாப்ரியா தம்பதிகளின் மகன் ஆகாஷ் (23). அரசு பள்ளியில் +2 முடித்துவிட்டு டிப்ளமோ கல்வி பயின்றுள்ளார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆகாசுக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்தி நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இதனிடையே சர்வதேச அளவில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அவரது விருப்பமாக இருந்து முழு உத்வேகத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டார். அவருக்கு பயிற்சியாளர் என்று யாரும் இல்லை.
பீனிக்ஸ் பறவை போல் தானாகவே பயிற்சி எடுத்துக் கொண்டு முழு மூச்சுடன் செயல்பட்டார். இதன் பலனாக தஞ்சாவூரில் மாநில அளவில் நடைபெற்ற போட்டி மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தார். அதன் பிறகு இந்து-நேபாலில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் ஆகாஷ் பங்கேற்றார். இதில் சீனா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட
10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய 3 போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற ஆகாஷ் ஆசிய போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றார். இதையடுத்து இந்தியாவிற்கு 3 தங்கம் வென்று பெருமை சேர்த்த ஜெயங்கொண்டம் வீரர் ஆகாஷ் நேபாளில் இருந்து ரயில் மூலம் அரியலூர் வந்தடைந்தார். பின்னர் அரசு பேருந்தில் தனது சொந்த ஊரான முத்துசேர்வாமடத்திற்கு வந்தார். அப்போது மீன்சுருட்டி கடைவீதியில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள்,வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
பின்னர் இது குறித்து ஆகாஷ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறிய கிராமமான முத்துசேர்வாமடத்தில் வசித்து வருகிறேன். சிறு வயதில் இருந்து விளையாட்டில் ஆர்வமாக ஈடுபட்டேன் இதன் பலனாக சர்வதேச அளவில் 3 தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளேன். மேலும் ஆசிய போட்டிகளில் பங்கு பெற உள்ளேன். இந்திய ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவதே எனது லட்சியம். எனது தந்தை விவசாயம் செய்து வருகிறார். கூடுதலாக உதவித்தொகை கிடைத்தால் ஆசியப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைப்பேன் என அவர் உறுதிப்பட தெரிவித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகள் எனது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்றார்.