கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த சிங்கம்பட்டி பகுதியில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகள் மற்றும் கிராவல் மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி வாகனத்தை ஊர் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தொடர்ந்து கிராவல் மண் கடத்தல் குறித்து கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் அப்பகுதிக்கு வந்த கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகளையும், ஒரு ஹிட்டாச்சி வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஹிட்டாச்சி வாகனம் பதிவு எண் குறிப்பிடாத புதிய வாகனமாக உள்ளது. மேலும், பொது மக்களால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும், கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்த கடவூர் வட்டாட்சியருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வருவதால் அவருக்கு ஏற்பட்ட பணி ரீதியான இடையூறுகளால் அப்பகுதியில் இருந்து சென்றுள்ளார். மேலும், நாளை காலைக்குள் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எழுதிக் கொடுத்த மனு தொடர்பான புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.