தஞ்சாவூர் அருகே மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி செல்வி (48). இவரது இளைய மகள் அபிராமி (23) அழகுக் கலை நிபுணராக இருந்து வந்தார். வீட்டில் புதன்கிழமை காலை தனியாக இருந்த இவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினர் 174 (சந்தேக மரணம்) என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நடுக்காவேரி காவல் நிலையத்தில் திருவையாறு அருகே மணத்திடலைச் சேர்ந்த வீரராஜேந்திரனின் மகன் முகேஷ் (23) வியாழக்கிழமை சரணடைந்தார். இதைத்தொடர்ந்து இவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில், அபிராமியும், முகேசும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் புதன்கிழமை காலை தனியாக இருந்த அபிராமியை முகேஷ் அவரது வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, முகேசை திருமணம் செய்து கொள்ள அபிராமி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அபிராமியை முகேஷ் கத்தியால் குத்தினார். இதனால், பலத்த காயமடைந்த அபிராமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அபிராமியின் கையில் முகேஷ் கத்தியை வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், தனது தந்தை வீரராஜேந்திரனிடம் நடந்த விவரத்தை முகேஷ் கூறினார். ரத்தக் கறை படித்த முகேஷின் சட்டையை வீரராஜேந்திரன் கழற்றி தனது வயலில் வேலை பார்க்கும் வளப்பக்குடியைச் சேர்ந்த எம். மகேந்திரனிடம் (37) கொடுத்தார். அவர் அச்சட்டையை குடமுருட்டி ஆற்றில் வீசினார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில், இந்த வழக்கை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி முகேஷ், வீரராஜேந்திரன், மகேந்திரன் ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.