வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரிடம், விலை உயர்ந்த ஆபரணங்கள், சேலை, துணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், டிவி அழகு சாதன பொருட்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை வாங்கி வரும்படி குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கூறுவார்கள்.
ஆனால் துபாயில் இருந்து மும்பை வந்த மகளிடம், ஒரு தாய் துபாயில் இருந்து 10 கிலோ தக்காளி வாங்கி வரும்படி கூறினார். துபாயில் ஒரு கிலோ தக்காளி இந்திய பணத்தில் ரூ.50 தான். எனவே தாயின் சொல்லை கேட்டு அந்த பெண் 10 கிலோ தக்காளி வாங்கிக்கொண்டு வந்தார். அந்த பெண் பெயர் ரேவ். அழகான அட்டை பையில் அடைத்து அவற்றை பாதுகாப்புடன் கொண்டு வந்தார். இதனால் அவரது தாய்க்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. தக்காளி வாங்கி வந்த மகளை, தங்கம் வாங்கி வந்த மகள் போல கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினார். இந்த தகவலை ரேவ்வின் சகோதரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் அதன் விதைகள் கொண்டு செல்வதில் சில கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அதனை பின்பற்றி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.