அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு பின்பு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்கும் என்பதால் மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி முறையிட்டார். அமலாக்கத்துறை சார்பிலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.இதையடுத்து தலைமை நீதிபதி அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்ததுடன், மேகலாவின் மேல்முறையீட்டு மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.