கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக லால்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்கள் குடும்ப அட்டை தாரர்களுக்கு வீடு வீடாக சென்று விண்ணப்பங்கள், டோக்கன்களை வழங்கி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நியாய விலை கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பம் வழங்குகின்றனர். யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும்.
முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலைக் கடைகளில் தமிழில் பலகை வைக்கப்பட உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் 1 கோடி பெண்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தகுதியானவை. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் இருந்தால் தகுதியானவை. ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் தகுதியானவையாக கருதப்படுகிறது. ஒரு குடும்பத்தில், 21 வயதை நிரம்பிய ஒருவருக்கு தகுதி அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளுக்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.