தஞ்சாவூர் மாநகராட்சி 33 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோரிகுளம் பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வந்தது. இதுபோன்ற பாதிப்பு அருகிலுள்ள 36 ஆவது வார்டுக்கு உட்பட்ட பூக்கார வடக்கு தெருவிலும் நிலவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் மூலம் அப்பகுதியில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவது தெரிய வந்தது.
தொடர்ச்சியாக மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் கோரி குளம், பூக்கார வடக்கு தெருவில் செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனனர். குடிநீரில் உள்ள பிரச்னை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு இப்பகுதி மக்களிடையே மாநகராட்சி அலுவலர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதனிடையே, கோரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மேயர் சண். ராமநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் ராமநாதன் கூறியதாவது… கோரிகுளம் பகுதியில் 16 பேரும், பூக்கார வடக்கு தெருவில் 14 பேரும் என 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதிகளில் 4 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், 80 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முகாம்களில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுதோறும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இப்பகுதியில் குடிநீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அந்த அறிக்கை வந்த பிறகு அது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளும், விழிப்புணர்வும் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மக்கள் பாதுகாப்பான சூழலில் உள்ளனர் என்றார் மேயர்.
சுகாதாரமற்ற முறையில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்ததாலும், குடிநீர் தொட்டி, சாக்கடைகள் சுகாதாரமாகப் பராமரிக்கப்படாததாலும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து ஏற்கெனவே மாநகராட்சி நிர்வாகத்தில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், சாக்கடைகளைச் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.