சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது.
அதேவேளை, சிரியாவின் வான்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வான்பரப்பில் நேற்று அமெரிக்க போர் விமானமும், ரஷிய போர் விமானமும் அருகருகே பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எம்.சி-12 ரக போர் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ரஷியாவின் சு-35 ரக போர் விமானம் அதன் அருகே மோதும் வகையில் வந்தது. இதனால், திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக இரு போர் விமானங்களும் விலகி சென்றன.