கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதல்வர்
சித்தராமையா ஆகியோர் கர்நாடகா சென்றுள்ளனர். அவர்கள் உம்மன் சாண்டி உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் ராகுல் காந்தி உம்மன் சாண்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே தனது இரங்கல் செய்தியில் ”நாட்டிற்கும், முக்கியமாக கேரளாவிற்கு மிகப்பெரிய இழப்பு. சிறந்த தலைவர். காங்கிரஸ் கட்சிக்காக நீண்ட காலம் பணியாற்றியவர். அவர் நேர்மையான கட்சி தலைவர். இன்று அவரை இழந்துள்ளோம். நான் மிகவும் கவலையடைகிறேன். இது மிகப்பெரிய இழப்பு” என்றார். ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் ”இந்திய மற்றும் கேரள உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். கேரள மக்களின் உண்மையான தலைவராக திகழ்ந்தவர். அவரை நாம் தவற விடுகிறோம். நாங்கள் அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வாடும் ஒவ்வொருவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.