Skip to content

அமைச்சர் பொன்முடியிடம் அதிகாலை 3 மணி வரை விசாரணை.. இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக மீண்டும் சம்மன்..

  • by Authour

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி உள்ளார். இவர், கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை கனிமவளத்துறை அமைச்சராக பதவியில் இருந்தார். அவரது பணிக்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் அளவுக்கு மீறி செம்மண் வெட்டி எடுத்ததாக, அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வேண்டுமென்றே செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த 2011ம் ஆண்டு இறுதியில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.  கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கில், தற்போது சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, விழுப்புரம் புதுச்சேரி சாலை, கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள வீடு, பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் வீடு, அவரது உதவியாளர்கள் வீடு, விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் அமைச்சருக்கு சொந்தமான கயல் பொன்னி நிறுவனம், சென்னை கே.கே.நகரில் உள்ள கவுதம் சிகாமணியின் உறவினர் நடத்தும் தனியார் மருத்துவமனை என 9 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடி அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவை கடந்த நீடித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  சுமார் அதிகாலை 3.10 மணியளவில் அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியிடம் அமலாக்கத் துறை நடத்தப்பட்டுவந்த விசாரணையும் முடிவு பெற்றுள்ளது. இருவரும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினர். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!