மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி…
திருச்சி, மண்ணச்சநல்லூர், சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவளப்பூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருபவர் சரத்குமார்( 24). இவர் அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்த போது மதிவாணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டாரை இயக்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சரத்குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தாய் அளித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது….
திருச்சி, மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி மண்ணச்சநல்லூர். காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் பிள்ளை கல்லூரி அருகே சோதனை மேற்கொண்டபோது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த பூபதிராஜா , ரங்கசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நிலத்தகராறு… முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு…
திருச்சி, துறையூர் , அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரியன்( 70). இவருக்கும் இவருடைய சகோதரர் மகன்களாகிய செல்வக்குமார் ஹரிதாஸ் ஆகியோருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆரியன் தனது விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த செல்வகுமார் ஹரிதாஸ் 2 பேரும் நிலத்தகராறு தொடர்பாக ஆரியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் .அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் செல்வக்குமார் ஹரிதாஸ் 2 பேரும் தாக்கியதில் ஆரியன் காயமடைந்து துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் தான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து துறையூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.