திருச்சி சர்வதேச விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம், விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான சத்திய பிரியா தலைமையில் விமான நிலைய கூட்டரங்கில் நடந்தது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு சம்மந்தமான ஒத்திகை பயிற்சி நடத்தியும், தீவிரவாதிகளிடமிருந்து விமானத்தில் உள்ள பயணிகளை எவ்வாறு பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
இக்கூட்டம் மற்றும் பயிற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்தார்.