நாளை ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள். ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது. இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி மக்கள், திருச்சி காவிரி நதிக்கரையில் மக்கள் திரண்டு முன்னோர்களுக் தர்ப்பணம் கொடுப்பார்கள். குறிப்பாக திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கல்லணை, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, கும்பகோணம், பூம்புகார், முக்கொம்பு, உள்ளிட்ட காவிரி நதிக்கரை முழுவதும் அமாவாசையன்று மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இதையொட்டி நாளை அதிகாலையிலேயே மக்கள் காவிரிக்கரையில் திரண்டு விடுவார்கள். பொதுமக்கள் பாதுகாப்புக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
ராமேஸ்வரம் கடலில் தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். அதிலும் ஆடி மாத அமாவாசை என்பது மிகவும் சிறப்பானது என்பதால் நாளைய தினம் ஆடி அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் பல்லாயிரகணக்கான மக்கள் திரண்டு கடலில் நீராடுவார்கள். இதையொட்டி நாளைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் (17.7.2023) அன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சேதுக்கரை தேவிபட்டினம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்ல உள்ளதால் போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி 17.7.2023 அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும் மேற்படி விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக 22.7.2023 அன்று நான்காவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.