கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில் வேடப்பட்டி அருகே வேகமாக வந்துள்ளது.அதே வேளையில் எதிர் திசையில் கோவையிலிருந்து மாதம்பட்டி நோக்கி அதி வேகமாக சென்ற கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது பேருந்தை
ஓட்டுனர் நிறுத்த முயன்ற போது அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீதும் பேருந்து மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதுடன் காரை ஓட்டி வந்த மாதம்பட்டி அடுத்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபி சங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதை அடுத்து அப்பகுதி மக்கள் படுகாயத்துடன் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் கோபி சங்கர் மற்றும் பழ வியாபாரி சுப்பிரமணி ஆகியோரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பான பதபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது……