கரூர் மாவட்டத்தில் வனப்பரப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டமாக உள்ளது. அதனால் மலைவாழ் உயிரினங்கள் அதிக அளவில் இல்லாத சூழ்நிலை உள்ளது. கடவூர் மலைப் பகுதியில் மட்டும் அரியவகை உயிரினமான தேவாங்கு இனம் உள்ளதால், அப்பகுதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தைச் சுற்றியுள்ள அய்யர்மலை, தோகைமலை, ரங்கமலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் குரங்குகள் அதிகமாக வசிக்கின்றன.
இந்த நிலையில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்குகள் சில கடந்த ஒரு சில தினங்களாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கரூர் மாநகரில் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலைய ரவுண்டானா, மனோகரா கார்னர், லைட் ஹவுஸ், சர்ச் கார்னர் ஆகிய பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக இன்று காலை பேருந்து நிலையம் ரவுண்டானா அமைந்துள்ள மனோகரா கார்னர் பகுதியில் இரண்டு குரங்குகள் வணிக கட்டிடங்கள் மீது தாவி குதித்து, கட்டிடங்களுக்கு இடையே செல்லக்கூடிய
நெட்வொர்க் கேபிள்கள் மீது இங்கும் அங்கமாக தலைகீழாக தொங்கிக்கொண்டு அலைந்து திரிந்தன. இதை ஆர்வமாக வேடிக்கை பார்த்த பொதுமக்களில் ஒரு சிலர் குரங்கு ஒன்றுக்கு வாழைப்பழங்களை வழங்கினர். அதை அந்த குரங்கு ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டது.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்த பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு வனத்துறையினர் அவற்றை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.