தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த அசோகன் தங்க மாளிகை நகை கடையில் பொது மக்களிடமிருந்து பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பணமாகவும், நகைகளாகவும் பெற்று அவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா பள்ளிக்கொண்டாள் வடக்குத் தெருவை சேர்ந்த விஜயகுமார் மனைவி ஜெமிலாவெற்றிக்கொடி என்பவர் கொடுத்த புகார் சம்மந்தமாக பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு தற்போது தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவில் புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அசோகன் தங்க மாளிகை நகை கடையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த தஞ்சாவூர் மற்றும் அதன் கிளைகளான ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் பொது மக்கள் முதலீடு செய்தும் ஏமாற்றப்பட்டுள்ளதாக புலன் விசாரணையில் தெரிய வருகிறது. எனவே இவ்வழக்கில் அசோகன் தங்க மாளிகை நகை கடைகளில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து முதலீட்டு தொகைகள் மற்றும் தங்க நகைகள் திருப்பி தரப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் அவர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை, ராஜப்பா நகர், முதல் தெருவில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் உரிய ஆவணங்களுடன் ஆஜர் ஆகி புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.