அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரது கைது சட்ட விரோதமானது இல்லை என்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக திமுக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது.. செந்தில் பாலாஜி வழக்கில் 3ஆவது நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து, செந்தில் பாலாஜி கைது சரிதான் என்றும் இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கை விசாரித்த அந்த இரண்டு நீதிபதிகளுக்கும் தனது தீர்ப்பையும் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இறுதித் தீர்ப்பை அளிக்க உள்ளனர். நீதிபதி சி.வி. கார்த்திகேயன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் நாளில் காலை முதலே சோதனை நடந்து கொண்டிருந்தது. எனவே, கைதின் போது அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது போலக் கூறியுள்ளார். இருப்பினும், இந்த கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கைதுக்கான காரணம் காவல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அது அவருக்கே தெரியும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அவர்களுக்கே தெரிந்திருக்கும் இதனால் கைதுக்கான காரணம் குறித்து தகவல் தரத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் எந்தவொரு தீர்ப்பையும் வழங்கவில்லை. மேலும், முதல் 15 நாளில் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதற்குள் விசாரிக்கவில்லை என்றால் அதன் பிறகு எப்போதுமே விசாரிக்க முடியாது. இதை உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. 15 நாட்கள் முடிந்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தது. இருப்பினும், இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாததால் அவரை அமலாக்கத் துறையினரால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்றும் இதனால் இந்த காவலை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி கார்த்திகேயன் புதிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தே இல்லை. இந்த வழக்கின் முக்கியத்துவம் என்னவென்றால், அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்பதை அனைத்து நீதிபதிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கூட அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்பதை ஒப்புக் கொள்வதாகவே கூறினார். இருப்பினும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கத் துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை என்ற போதிலும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை. இந்த வழக்கு இப்படியொரு சூழலில் தான் இருக்கிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதனை வரும் 24 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது. அன்றைய தினம் இந்த அனைத்து தீர்ப்புகளும் அங்கே சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் இதில் இறுதி முடிவை எடுக்கும்.. இவ்வாறு வக்கீல் சரவணன் கூறினார்.