அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் இதுவரை நிலவுக்கு விண்கலம் அனுப்பி உள்ளது. 4வதாக அந்த முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.இன்று அந்த விண்கலம் ஏவப்பட்டது. அதற்கு சந்திரயான் 3 என பெயரிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2மணி 35 நிமிடத்திற்கு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 40 நாளில் நிலவின் தென்துருவத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சந்திரயான் விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. இன்று பகல் 12 மணியுடன் விண்கலத்தில் செய்யவேண்டிய அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் விண்கலம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.
சந்திரயான் விண்ணில் பாயும் காட்சியை பார்க்க இந்தியா முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அந்த வளாகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சந்திரயான் சீறிப்பாய்ந்ததை பார்த்ததும் மகிழ்ச்சியில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவே இதனை பெருமிதத்தோடு உற்று நோக்கியது. பூமியில் இருந்து 3.84 லட்சம் மைல் தொலைவில் உள்ளது நிலவு.
நிலவின் தன்மை, வெப்பநிலை, மண்ணின் தன்மை குறித்து சந்திரயான் 3 ஆய்வு மேற்கொள்ளும். திட்டமிட்ட பாதையில் சந்திரயான் 3 சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது 10 கட்டங்களாக பயணிக்கும் வகையில் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திராயான்-3 குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 4 அல்லது 5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியான ககன்யானை எளிதாக்கும் வகையில் அதே ராக்கெட் மாற்றியமைக்கப்படும். இது எல்.வி.எம்-ன் 3-வது பணியாக இருக்கும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ராக்கெட் அடிப்படையில் அதே தான்.
இந்த ராக்கெட் சந்திரயானை 170×36000 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட சந்திரயான் அதன் 4 உந்துதல்களை எரிக்கும். பின்னர் அது சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும்.
இவ்வாறு அவர் கூறினார்.