பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கார்பீன் வகையைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கி கப்பல் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா, பிரான்ஸில் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.