அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் பொது மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தற்போது குடும்பத் தலைவிகள் மாதம் ரூ.1000- உரிமைத் தொகை பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று தினம் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் பயனாளிகளை தேர்வு செய்யும் விதி முறைகள், விண்ணப்பம் வினியோகம், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து வாங்குதல், விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதை போன்று தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பினை தன்னார்வலர்கள் முறையாக பயின்று அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, அரியலூர் வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.