தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் வாயிலாக திருச்சி கன்டோன்மென்ட் ஹீபர் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை திறந்து வைத்தார்.
பணித்திறனில் பெண்களின் பங்களிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கலிருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் தேவையாக உள்ளது.
இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது
மேலும் தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிற்கான புதிய விடுதிகளை உருவாக்கவும் செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் எண் 33/9 பிளாக்-3 அபிஷேகபுரம் பொன்மலை திருச்சி, என்ற முகவரியில் புதியதாக பணிபுரியும் மகளிர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்விடுதி 106 படுக்கை வசதியுடன் இருவர் / நால்வர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24/7 பாதுகாப்புவசதி. இலவச WiFi, பயோமெட்ரிக் பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் www.tnwhc.in என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள் மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பபட்டுள்ளது
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவசெல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா. மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.