சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்பு , மின்சாதன பொருட்கள், தங்கம் ,வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்டரீதியான வாரிசான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மோகன் அமர்வில் வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது என லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்தனர். இதையடுத்து ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார்.