Skip to content

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு…. தமிழகத்துக்கு புதிய அமைச்சர் உண்டா?

  • by Authour

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி, தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரத் துடிக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, குறைந்தபட்சம் 400 தொகுதிகளிலாவது பா.ஜ.க.வை எதிர்த்து பொது வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் எதிர்தரப்பு இறங்கி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 3ம் தேதி மத்திய அமைச்சரவை கூடியதை தொடர்ந்து, தெலங்கானா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டனர். இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் இன்று (புதன்கிழமை) மீண்டும் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை, விமான போக்குவரத்து, நீர்வளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பர்பாமன்ஸ் சரியில்லாதவர்கள், சர்ச்சைகளில் சிக்கியவர்கள் என 12 அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் எனவும், இணை அமைச்சர்களில் சிலர் அமைச்சராகவும் ஆகலாம் எனவும் பேசப்படுகிறது. மேலும், கேரளாவில் வலுப்பெறும் நோக்கில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ‘மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும்  ஸ்ரீதரன் போன்றோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பாஜக தீவிர கவனம் வைத்துள்ளதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது  ஓரிரு நாளில் தெரியவரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *