திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி இந்த நிறுவனம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முதலில் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜா என்ற அழகர்சாமி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். தற்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கிறார்கள். ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக, இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் அவர் வாங்கிய சொத்து விவரங்கள், சொத்து வாங்க முடிவு செய்து முன்பணமாக கொடுத்த விவரங்கள் மற்றும் அசையும் சொத்து விவரங்கள் போன்ற தகவல்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் ராஜா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.இந்த நிறுவனம் ரூ.6ஆயிரம் கோடி மோசடி செய்திருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.