இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 202 – 23 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின். வரைவோலைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதில் முதலாவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புற பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள தலா ரூ. 2 லட்சம் வீதம் , 50 கோடி ரூபாய்க்கான வரைவோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் அடையாளமாக இன்று 20 திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளுக்கு வரைவோலையை வழங்கினார்.
அதுமட்டும் இன்றி, இதற்கு அடுத்தபடியாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கம் கிராமத்தில் 2 கோடியே 40 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாக கட்டிடத்தையும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி 10 பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ள புதிய ஆட்டோ ரிக்ஷாவிற்கான பதிவு மற்றும் அனுமதி ஆவணங்களையும் முதல்வர் வழங்கினார்.