நெகிழி இல்லாத தஞ்சாவூரை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய நெகிழி ( பிளாஸ்டிக் ) பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தக்காளியை இலவசமாக வழங்கும் நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது .
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர்.அஞ்சுகம் பூபதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் நெகிழி மக்காத குப்பை ஆகையால் மக்களால் பாவித்து விட்டு தூக்கி வீசப்படும் ஒவ்வொரு நெகிழியும் மண்ணை மலடாக்கி அழகான நதிகளின் அழகை சிதைத்து அங்கு வாழும் உயிரினங்களையும் சுவாசிக்கவிடாது செய்கிறது. இன்றைக்கு நாம் வாழும் சூழலில் எண்ணிலடங்காத மாசடைவுகளுக்கு நெகிழி ஒரு முக்கியமான
காரணமாகும் . ஆதலால் நாமும் நெகிழி பொருட்கள் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார் .
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில் நெகிழி இல்லாத தஞ்சாவூரை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய நெகிழியை பெற்றுக் கொண்டு இன்று விலையில்லா தக்காளி 1 கிலோ வழங்கி இருக்கிறோம் . இந்நிகழ்ச்சியில் நாங்கள் பயன்படுத்திய பேனர் துணியால் செய்யப்பட்டது . அதேபோன்று நாங்கள் தக்காளி வழங்கிய பையும் நெகிழி இல்லாத பைகளில் தான் தக்காளியை வழங்கியுள்ளோம் . பொதுவாகவே விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலே பேரணி, நோட்டீஸ் கொடுப்பது என்று ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடும் . ஆனால் இன்றைக்கு இந்த நிகழ்வு என்பது ,தக்காளி விலை வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டு சாதாரண மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலையில் உள்ளனர் . எனவே இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக 1 கிலோ தக்காளியை விலையில்லாமல் வழங்கும் நூதன முயற்சி மூலம் நெகிழி ஒழிப்பு பற்றி பொதுமக்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தனர் .
நாஞ்சிக்கோட்டை சாலை RMS காலனி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய நெகிழியை கொடுத்துவிட்டு ஒரு கிலோ விலையில்லாத தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர் . தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலையில்லாமல் தக்காளி வழங்கப்பட்ட நூதன நிகழ்வு தஞ்சையில் இல்லத்தரசிகளின் பாராட்டை பெற்றது .
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் தலைமையில் அறக்கட்டளை மேலாளர் ஞான சுந்தரி , மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர் .