திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புள்ளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (60) ஐஸ் வியாபாரி. இவர் தனது மகன்மாரிமுத்து, 3வது மனைவி ஸ்ரீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று காலை இரு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார். மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆண்டவர் கோவில் கலிங்கப்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் இவர்களை சரமாரியாக வெட்டத் தொடங்கியது.
இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மாரிமுத்து பலத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை
தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்துவிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் குப்புசாமி என்பவரின் உறவினர் பெண் ஒருவரின் காதல் பிரச்சினையால் வந்த முன் விரோதம் என்றும் கூறப்பட்டதை தொடர்ந்து டிஎஸ்பி ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி தலைமையில் தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்,
இதில் கரும்புலிப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் தினேஷ் (25), பழனியப்பன் மகன் தேவா (20) , ராமர் மகன் மணிகண்டன் (25), பெரியசாமி மகன் சந்துரு (22), குளித்தலை தேவர் மலையை சேர்ந்த குழந்தை வேலு மகன் ஸ்டாலின் (21), குழந்தை வேலு மகன் பிரவீன் (24) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.