திருச்சி தில்லைநகர் பகுதியில் செந்தூர் ஃபின் கார்ப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை, கணபதிநகரில் வசித்து வரும் பொ. முத்துராமலிங்கம் (43) என்பவர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், இரட்டிப்பு தொகை தருவதாகவும் கூறியதை நம்பி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கயாளர்கள் பலர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் குறிப்பிட்டபடி தொகையை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு, நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இது தொடர்பாக திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துராமலிங்கம் தம்பதியரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான திருச்சி கே கே நகர் பகுதியைச் சேர்ந்த ஷாகுல்அமீது என்ற ஜவுளி வியாபாரியொருவர், அவரிடமும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ரூ.4.07 கோடி மோசடி செய்ததாக, திருச்சி மாநகர குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸில் கடந்த மார்ச் 11ம் தேதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் மீண்டும் தலைமறைவாகினர். இதனையடுத்து அவரது நிறுவனம் மற்றும் வீடு உள்ளிட்டவைகளில் போலீசார் கண்காணித்து வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு பாரதி மட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருச்சி பெரிய செட்டித்தெரு பகுதியில் ஒரு இடத்தில் முத்துராமலிங்கம் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் நேற்று பிற்பகலில் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 1.83 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.