நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பிக்க வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும் இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் எனவும் வரும் 28 ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
‘நெக்ஸ்ட்’ நுழைவுத் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என்றும் நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.