108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை (டிசம்பர் 22-ம்தேதி) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடும் விழா கடந்த டிசம்பர் 14ம் தேதி நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியானது திருநெடு தாண்டத்துடன் தொடங்கி, பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 22ம்தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கும் இந்த விழாவினையடுத்து, டிசம்பர் 23 -ம்தேதி முதல் பகல்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுவதுடன் பகல்பத்து உற்சவத்தின் இறுதிநிகழ்வாக வரும் ஜனவரி 01- ம் தேதி மோகினி அலங்காரமும், முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் ஜனவரி 02- ம் தேதி திங்கள் கிழமை முதல் தொடங்குகிறது. இது ஜனவரி – 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து இன்று திருச்சி விமான நிலையத்தில் வைகுண்ட ஏகாதசி ஸ்பெசலாக பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மற்றும் கருவறை மாடல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டு சொர்க்கவாசல் நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.