Skip to content

ஜிஎஸ்டியில்…….2மாதத்தில் மட்டும் ரூ.15ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு

வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும், உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதற்கும் இந்த எண் பயன்படுகிறது. அதே சமயத்தில், சில மோசடியாளர்கள், போலி விலைபட்டியல் அளித்து, உள்ளீட்டு வரியை திரும்ப பெற்று, மத்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய போலி ஜி.எஸ்.டி. பதிவுகளை கண்டறிய நாடு முழுவதும் 2 மாத கால ஆய்வு, கடந்த மே 16-ந் தேதி தொடங்கியது. வருகிற 15-ந் தேதி இப்பணி முடிவடைகிறது.

இந்நிலையில், ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஷஷாங்க் பிரியா, டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான தேசிய மாநாட்டில் பேசியதாவது:

69 ஆயிரத்து 600 ஜி.எஸ்.டி. அடையாள எண்கள், ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், இதுவரை 59 ஆயிரத்து 178 அடையாள எண்கள், கள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்களில், 16 ஆயிரத்து 989 எண்கள் புழக்கத்திலேயே இல்லை. 11 ஆயிரத்து 15 எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 972 போலி ஜி.எஸ்.டி. பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரூ.15 ஆயிரத்து 35 கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது. ரூ.87 கோடி, திரும்ப பெறப்பட்டுள்ளது. . இந்த ஆய்வின் மூலம், ஜி.எஸ்.டி. பதிவிலும், கணக்கு தாக்கலிலும் காணப்படும் ஓட்டைகளை அடைப்பது அவசியம் என்று தெரிய வந்துள்ளது. வர்த்தகர்கள் மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்ய பயன்படுத்தும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம், வர்த்தகர்களுக்கு உகந்தவகையில் சீர்திருத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 1 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *