மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:ஆளும் கட்சியினராக இருப்பதால் தி.மு.க.வினருக்கு பழைய உணர்வுகள் இல்லை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பத்தை விட்டு வருகிறவன் தி.மு.க. தொண்டன். அதுபோல வேறு எந்த கட்சியிலும் கிடையாது. அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப தி.மு.க. தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தி.மு.க. வரலாறு தெரியாமல் சிலர் சவால் விடுகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பெங்களூரு சென்று விட்டு திரும்ப முடியாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். முடிந்தால் அவர் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும். பிறகு என்ன நடக்கும்? என தெரியும். மற்ற கட்சிகளை போல் தி.மு.க. வில் தற்போது வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் மோடிகள் வந்தாலும் தி.மு.க. வை அழிக்கவும் முடியாது. ஒழிக்கவும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.