கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 2023 – 24ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி கல்லூரிகளில் ராகிங்கை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ரோஜா மலர்கள், பேனா, பாரம்பரிய இனிப்புகள்
கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழாவில் கரூர் ஜவுளி பூங்கா தலைவரும் தொழிலதிபருமான அட்லஸ் நாச்சிமுத்து மற்றும் மும்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மனிதவள மேலாளர் நயீம்கான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்தில் தொழில்நுட்ப தேவைப்பற்றியும், வேலைவாய்ப்பு தொடர்பாகவும் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.