வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. மாநிலம் முழுவதும் பரவிய கலவரத்தில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்னர். இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கலவரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கு பிரச்சினை எவ்வாறு இருக்கிறது, கைது நடவடிக்கை, எவ்வளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது, எத்தனை நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது, இயல்பு நிலை திரும்ப என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு தரக் கோரிய பழங்குடியின மக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் விரிவான அறிக்கையின் அடிப்படையில் தான் வழக்கின் விசாரணையை நடத்த முடியும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை மெல்ல மெல்ல சீராகி வருகிறது என்றும் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.