Skip to content
Home » மயிலாடுதுறை அருகே 5 நாட்களுக்கு ஊரடங்கு …. டிஐஜி ஆய்வு…

மயிலாடுதுறை அருகே 5 நாட்களுக்கு ஊரடங்கு …. டிஐஜி ஆய்வு…

மயிலாடுதுறை தாலுகா பட்டவர்த்தி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர்  .ஈழவளவன் தலைமையில் காவல்துறை அனுமதியை மீறி அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானது. இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பிரச்னை ஏற்பட்ட இடத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 6-இல் பிரச்னைக்குரிய இடத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படம் வைத்து கூட்டம் கூடாமல் நிகழ்ச்சி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு அனுமதி அளிக்கவேண்டும் என விசிக்கள் சார்பில் கேட்கப்பட்டது. இதுதொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர்  இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் கடந்த சனிக்கிழமை மனு அளித்தனர்.

இந்நிலையில், தலைஞாயிறு பட்டவர்த்தியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் அளித்த வேண்டுகோளை ஏற்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா பட்டவர்த்தி மற்று அதனை சுற்றியுள்ள 1 கி.மீ தூரத்திற்கு 5 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் 10ஆம் தேதி இரவு 12 மணிவரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும், இதனால் அங்கு வெளிநபர் யாரும் நுழையாதவாறு 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டும் அப்பகுதியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *