வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக ரூ.2,357 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 2-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அன்றே, மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கிவைக்கின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்கான முதல்கட்டப் பணிகளை, உணவுப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் செயல்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் வீடு வீடாகச் சென்று, நாளை மற்றும் நாளைமறுநாள் டோக்கன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தெரு வாரியாகவோ, வரிசை எண் அடிப்படையிலோ டோக்கன் வழங்க வேண்டும். மேலும், எந்த நாளில், எந்த நேரத்தில் கடைக்கு வரவேண்டும்என்பதையும் டோக்கனில் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:பொங்கல் பரிசு