அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது எம்ஜிஆர்’ மற்றும் டிவி சேனல் ஆக ‘ஜெயா டிவி’ இருந்து வந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சி பிளவு பட்டது. தற்போது, இந்த இரு ஊடக நிறுவனங்களும் டிடிவி தினகரன் தரப்பால் இயக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், ‘நமது அம்மா’ என்ற நாளிதழையும், ‘நியூஸ் ஜெ’ என்ற டிவி சேனலையும் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
முன்னதாக, இது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் இணைந்து தொடங்கப்பட்டாலும், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், ஓ பன்னீர் செல்வத்திற்கு அதில் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நாளிதழின் நிறுவனர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே புது நாளிதழை தொடங்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார். இதனிடையே சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதியில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் 87 மாவட்ட செயலாளர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 7 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ‘நம் புரட்சி தொண்டன்’ என்ற தினசரி நாளிதழை தொடங்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நாளிதழுக்கு ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.