திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீ பிடித்து
சிகிச்சையில் இருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி 26 வயதான ரோஜா. கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 17ஆம் தேதி அன்று காலையில் கூலி வேலைக்கு சென்றுள்ளார் செல்லதுரை. அவரது மனைவி ரோஜா வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரோஜா அணிந்திருந்த சேலையில் திடீரென தீ பற்றியது அதனை அணைப்பதற்க்குள் ரோஜா எவ்வளவு முயற்சி செய்தும் அணைக்க முடியவில்லை. ரோஜாவிற்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் ரோஜாவை மீட்டு சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோஜா மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.