மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை கோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம் வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) வெளியாகிறது. இந்த படத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளை கதைக்களமாக உருவாக்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியானால் தமிழகத்தில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்கும் வகையில் மாமன்னன் படத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளது என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். படம் பார்த்த 2 நாட்களில் மக்கள் மறந்து விடுவார்கள் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் காவல்துறை பார்த்துக்கொள்வார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.