அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிக்க முடியவில்லை, இதனால் அங்கு சென்ற அமலாக்கத் துறையினர் காபி மட்டுமே குடித்துவிட்டு வந்தனர் என ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் துஷார் மேத்தா வாதம் செய்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜியின் வீட்டில் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அவரை கைது செய்தனர். ஆனால் எதற்காக கைது செய்கிறார்கள் என தனது கணவரிடமோ உறவினர்களிடமோ அமலாக்கத் துறை அதிகாரிகள் சொல்லவில்லை என அவருடைய மனைவி மேகலா கூறுகிறார்.
எனவே சட்டவிரோத கைதை எதிர்த்து ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை மேகலா தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் செந்தில் பாலாஜி சார்பில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ ஆஜராகியுள்ளனர். இந்த வழக்கு ஏற்கெனவே 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். கைதுக்கான மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்த பதிவுகள் இல்லை. கைது செய்தது குறித்த தகவல் காலை 8.12 க்குத் தான் தெரிவிக்கப்பட்டது என செந்தில் பாலாஜி தரப்பு வாதம் செய்தது. அதே வேளையில் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, தனது வாதத்தில் கூறியிருப்பதாவது… செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம். தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றிய உத்தரவில் நீதிமன்ற காவல் நீடிக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. செந்தில் பாலாஜியை டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்க முடியும். இந்த நிபந்தனையால் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்த முடியவில்லை. காபி மட்டுமே சாப்பிட்டு வந்தனர் என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.