அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இப்பேரவையின் அமைப்பு செயலாளர் நாகராஜன் தலைமையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தின் துவக்கமாக அமலாக்க துறையை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இப்போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜன்… அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை சட்டவிரோதமானது. அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும். மாதம்தோறும் நண்பர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி செலவு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமலாக்கத்துறை வருமானவரித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த பிறகு, அண்ணாமலை தூண்டுதலின் பெயரால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்படுகிறது. திராவிடமாடல் ஆட்சியை சீர் குலைக்கின்ற வகையில், ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை பழிவாங்குகிற நோக்கில், திமுக அரசிற்கு எதிராக இந்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மோடி சர்க்கார் ஜனநாயக விரோத போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஒற்றை கருத்துகள் உடைய அமைப்புகளை திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.