திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரியவிலை வழங்கப்படாததை கண்டித்தும், ஸ்ரீரங்கத்தில் அரசால் கட்டப்பட்ட பூ மார்க்கெட் தற்போது வரை செயல்படாமல் மூடப்பட்டு இருப்பதை கண்டித்தும், இடைத்தரர்களால் சாத்தார வீதியில் உள்ள பூ
மார்க்கெட்டில் பூக்களுக்கு குறைந்த விலை விவசாயிகளிடம் நிர்ணயம் செய்யப்படுவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பூக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு, இடுபொருட்கள் விலை உயர்வு, இயற்கை சீற்றம்போன்ற நெருக்கடிகளை கடந்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்கமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். பூக்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நறுமண தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.